அது என்னவோ தெரியவில்லை...
//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு....
//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு....
உன்னப்பனின் விண்ணப்பம்
வா
வழி நெடுக பேசிக்கொண்டே...
நீ பிறக்க-
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,
மொத்த கனவுகளின்
ஒற்றைப் பலன்!
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.
பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!
ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!
கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடது கை விரல் பிடித்து
நீயும்
வலது கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற தினம்
நினைவிருக்கா உனக்கு...?
நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!
நீ உண்டமிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!
வளர்ந்தொருநாள்
வாலிபம் என
இளைஞனாவாய்...
இளமை...
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திறிவாய்...
இருப்பதெல்லாம்
இஷ்ட்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்...
இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்...
இல்லாதோருக்கு ஈவாய்
இன்னலுற்றோருக்கு உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்...
இத்தனை சிறப்போடும்
இன்னபிற எழிலோடும்
இருக்கும்
இன்னிலையில்...
முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...
முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-
மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ
முடங்கிப்போகையில்...
முச்சந்தியில் விடாமல்
முடிந்தால்
முழு பசிக்குமாக
முக்காலத்திற்குமாய்
மூன்று கவலம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தருவாயா மகனே?
- sabeer
LABEL:-
sabeer
0 comments:
Post a Comment